பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளன – திருமாவளவன்!
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அனைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் பின்னணியில் சங்பரிவார் அமைப்பினர் இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மற்ற எந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபடுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் தவறானது என குறிப்பிட்டார்.
ஆளுநரின் இந்த மக்கள் விரோத போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் கடந்த 13 ஆம் திகதி மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ள நிலையில் இன்று சிறப்பு கூட்டத்தொடரில் ஒரு நாள் அமர்வாக நடந்தேறி தமிழக முதல்வர் மீண்டும் இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியுள்ளார் எனவும் கூறினார்.
கடைந்தெடுத்த சனாதன பேர்வழியாக உள்ளார் ஆளுநர் என்றும் திமுகவிற்கு எதிராக உள்ளதுடன் பெரியார், அம்பேத்கரை எதிரிகளாக பார்க்கிறார். அந்த பெயர்களை அருவருப்பாக பார்க்கிறார் என்றும் விமர்சித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய மசோதாக்களை திருப்பி அனுப்பி நெருக்கடிகளை உருவாக்குவதாக எண்ணுகிறார் என்றும் அதற்கு வன்மையான கண்டனங்களை கூறுவதுடன் அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுபோன்ற ஆளுநர்கள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அவர், ஆளுநர் ரவி மிக மோசமாக நடந்து கொள்வதாகவும் ஆளுநர் வெளிப்படையாக ஏன் எதிர்க்கிறார், 10 மசோதாக்களை எதற்காக திருப்பி அனுப்புகிறார் என ராஜ்பவன் ஏன் விளக்கம் அளிக்க கூடாது? எனவும் கேள்வி எழுப்பினார்.
மக்கள் போராடுவது என்பது ஜனநாயகத்தின் வடிவம் என்றும் திருவண்ணாமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை என்றும் கூறிய திருமாவளவன், அது வன்மையான கண்டனத்திற்கு உரியது என்றும் ஆறு பேர் மீதான வழக்கு திரும்ப பெற்ற நிலையில் இன்னொரு நபர் மீதான வழக்கும் திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைபாடு எனவும் கூறினார். இதேபோல் பாஜக ஆட்சி வந்த பிறகு தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருவதாகவும் அனைத்து பெட்ரோல் குண்டு வீட்டு சம்பவங்களிலும் சங் பரிவார் அமைப்பினர் பின்னனியில் இருப்பதாகவும் கூறியதுடன், மற்ற அமைப்பினர் யாரும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்தியா கூட்டணி உருவாக்குவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணியில் தொடரும்இ தேர்தலில் பங்கேற்கும் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.