அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு!
பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது.
இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது.
எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.