WhatsAppஇல் விளம்பரங்கள்? புதிய திட்டத்தில் மெட்டா
உலகிலேயே அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் இதுவரை விளம்பரங்கள் ஏதும் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது வரை உலக அளவில் 2.78 பில்லியன் பயனர்கள் வாட்ஸ் அப்பை பயன் படுத்துகிறார்கள். ஆனால் விரைவில் வாட்ஸ் அப்பிலும் விளம்பரங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது வாட்ஸ் அப் வெறும் மெசேஜ்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக மட்டுமே இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த தளத்திற்கு சமூக வலைதள அந்தஸ்தை உருவாக்கும் பணிகளில் மெட்டா நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. whatsapp தளத்தின் அடிப்படை யோசனையே மெசேஜ்கள் அனுப்பும் பக்கத்தில் விளம்பரங்கள் அனுப்பமாட்டோம் என்பதுதான். ஆனால் வாட்ஸ் அப்பின் மற்ற பக்கங்களான சேனல் மற்றும் ஸ்டேட்டஸ் பக்கங்களில் விளம்பரங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக வாட்ஸ் அப் தலைவர் வில் கோத்கார்ட் தெரிவித்துள்ளார்.
தற்போது வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் சேவை மூலமாகவும், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் காட்டப்படும் விளம்பரங்களைப் பயன்படுத்தி மெட்டா நிறுவனம் வருமானம் ஈட்டி வருகிறது. இதிலிருந்து மொத்தமாக இந்நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர்களுக்கும் அதிகப்படியான வருவாய் வருவதென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போதெல்லாம் பல சமூக வலைதளங்களில் AI வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ் அப்பிலும் இதுபோன்ற வசதிகளை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. விரைவில் செயற்கை நுண்ணறிவு வசதிகளுடன் விளம்பரங்களும் வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்படும் என நாம் எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே எந்த சமூக வலைத்தளங்களுக்கு சென்றாலும் விளம்பரங்கள் நம்மை எரிச்சலூட்டிக் கொண்டிருக்கும் வேளையில், வாட்ஸ் அப்பிலாவது கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் எனப் பார்த்தால் இங்கேயும் விளம்பரங்கள் வரப்போகிறது என்ற செய்தியால் அதன் பயனர்கள் அதிருப்தியில் உள்ளனர்.