ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் : 30இற்கும் மேற்பட்டோர் பலி!
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட அகதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய காசாவில் பொதுமக்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இஸ்ரேல் தாக்குதல்களால் பாலஸ்தீனத்தில் மருத்துவமனை அமைப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், மருத்துவமனைகள் கல்லறைகளாக மாறியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைப்பிரசவ குழந்தைகள் உட்பட இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் தினமும் 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டாலும், புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்படுவதில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதனிடையே, பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக மத்தியஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், கடைசி நிமிடத்தில் மீண்டும் மீண்டும் நிபந்தனைகளை மாற்றி இஸ்ரேல் தவிர்த்து வருவதாக ஹமாஸ் செய்தி தொடர்பாளர் ஒசாமா ஹம்தான் தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலைக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் பாலஸ்தீனியர்கள் குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.