குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக விளையாட்டை பயன்படுத்த வேண்டாம் – நாமல்
கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அரசியல்வாதிகளின் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் தீர்வு காணப்பட வேண்டும், இல்லையெனில் வீரர்கள் அசௌகரியங்களுக்கும், பாரபட்சங்களுக்கும் ஆளாக நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளையாட்டு மற்றும் வீரர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து இது மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்கும் கிரிக்கட் நிர்வாகத்திற்கும் இடையிலான தற்போதைய முரண்பாடு காரணமாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்துள்ளதாகவும், விளையாட்டுத் தடையால் வருடாந்தம் சுமார் 100 மில்லியன் டொலர்கள் நேரடி மற்றும் மறைமுக நட்டம் ஏற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உள்ளக நிர்வாக பிரச்சினைகளை தீர்க்க விளையாட்டுத்துறையை பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக விளையாட்டைப் பயன்படுத்தக் கூடாது, பிரச்சினைகள் இருப்பின் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் இலங்கை விளையாட்டு வீரர்கள் அழிந்துவிடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ரக்பி மற்றும் கால்பந்தாட்ட நிர்வாகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும், இதன் விளைவாக அந்த விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, அரசியலுக்கும் விளையாட்டு நிர்வாகத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், கடந்த கால உண்மைகளின் அடிப்படையில் அதனைப் புரிந்துகொள்வது கடினமல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.