குப்பை நகரமான பாரிஸ் – அகற்ற முடியாமல் போராடும் அதிகாரிகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கழிவு அகற்றும் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து தற்போது பரிசில் 9,600 தொன் கழிவுகள் தேங்கியுள்ளன.
ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் எதுவும் எட்டப்படாத நிலையில், கழிவுகளை அகற்றும் பணியை பொலிஸார் கையில் எடுத்துள்ளனர்.
அவர்கள் சில தனியார் முகவர்களை கொண்டு கழிவுகளை அகற்றி வருகிற போதும், பரிசில் குவியும் கழிவுகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
கடந்தவார திங்கட்கிழமை பரிசில் 9,300 தொன் கழிவுகள் தேங்கியிருந்த நிலையில், தற்போது அது அதிகரித்து நேற்று காலை 9,600 தொன் கழிவுகள் தேங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய சீர்திருத்தத்தை இரத்துச் செய்யக்கோரி துப்பரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.