சூடான் உள்நாட்டு போர்; 2நாளில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடானில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போரில் 2 நாளில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 மாதங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிவிரைவு துணை ராணுவப்படை என்ற அமைப்பு தங்களையும் ராணுவத்தினர் என அறிவிக்க வேண்டும் என கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே நேரடி துப்பாக்கி சண்டைகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
லட்சக்கணக்கான பொதுமக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். தற்போதைக்கு இந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற நிலையே நிலவி வருகிறது.இந்நிலையில் கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், மேற்கு டார்ஃப்ர் என்ற இடத்தில் இரு தரப்புக்கும் இடையே நிகழ்ந்த போரில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், 300க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
துணை ராணுவ படையினர், பிரதான பழங்குடியினரான எல் ஜெனைனா பழங்குடிகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இது இன அழிப்பு எனவும் ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள துணை ராணுவ படையினர், பழங்குடிகளின் உயிரிழப்பிற்கு தங்கள் அமைப்பு காரணம் அல்ல என தெரிவித்துள்ளது.
இரு தரப்புக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை ஜெடா நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் தங்கி இருக்கும் தற்காலிக முகாம்களின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.