பணம் தான் நோக்கம் : இலங்கை கிரிகெட் அணியை கடுமையாக சாடிய சரத் வீரசேகர!
தாய் நாட்டுக்காக இல்லாமல் பணத்திற்காக சிறிலங்கா கிரிக்கெட் வீரர்கள் எல்.பி.எல். போட்டிகளில் விளையாடினார்கள். எனவே சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதென முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சரும் அரச தரப்பு எம். பி.யுமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09.11) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தாய் நாடு மீது அக்கறை உள்ளதா அல்லது அவர்களுக்கு வெறும் பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா எனும் சந்தேகம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், அமைச்சர் ரொஷான் ரணசிங்க உலகக் கிண்ணத் தொடர் இருப்பதால், எல்.பி.எல். போட்டிகளில் விளையாட வேண்டாம் என கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அறிவித்திருந்த போதும் பணத்திற்காக சில வீரர்கள் விளையாடினார்கள்.
இவ்வாறு விளையாடிய சிறந்த வீரர்களில் ஐவர் காயமடைந்தனர். இதனால், உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது.தனது தாய் நாட்டுக்காக அன்றி பணத்திற்காக இவர்கள் எல்.பி.எல்.இல் விளையாடினார்கள் என தெரிவித்தார்.