தொடர்ந்து 3 சதமடித்து சச்சினின் சாதனையை முறியடித்த ரச்சின் ரவீந்திரா
நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா உலக கோப்பை தொடரில் 3 சதத்தை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 401 குவித்தது. அதிலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அதிரடி காட்டினார். அவர் 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 108 எடுத்தார். இது இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அடிக்கும் 3வது சதமாகும்.
23 வயதாகும் ரச்சின் இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் குறைவான வயதில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 25 வயதுக்கு முன்பாக, 1996ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 2 சதங்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில், 27 ஆண்டுகள் கழித்து சச்சினின் சாதனையை ரச்சின் முறியடித்துள்ளார்.
அதேபோல், சச்சின் மற்றொரு சாதனையையும் ரச்சின் சமன் செய்துள்ளார். 1996ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின் 532 ரன் குவித்திருந்தார். இன்றைய போட்டியில் ரச்சின் அந்த சாதனையை சமன் செய்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த 25 வயதுக்கு உட்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அடுத்த போட்டியில் சச்சினின் அதிக ரன் குவித்த இளம் வீரர் என்ற சாதனையையும் ரச்சின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரை இணைத்தே, இவருக்கு ரச்சின் என அவரது பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.