தினேஷ் ஷாப்டரின் மரணம் கொலை என நீதிமன்றம் அறிவிப்பு
மர்மமான முறையில் மரணமடைந்த ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே மரணம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று (01) தெரிவித்துள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் மேலதிக நீதவான் இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டார்.
மரண விசாரணையின் தீர்ப்பை அறிவித்த நீதவான், நிபுணர் வைத்தியக் குழுக்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய தகவல்களை கருத்திற்கொண்டு உரிய தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் மருத்துவக் குழுவின் பெரும்பான்மையானவர்களின் கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐவர் அடங்கிய நிபுணர் மருத்துவக் குழுவின் உறுப்பினர்களின் கருத்து 4 க்கு 1 என குறிப்பிடப்பட்டதாகவும் நீதவான் அங்கு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தினேஷ் ஷாப்டரின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மே 8 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டு பின்னர் சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் சரம் கொண்டு கழுத்தை நெரித்ததாலேயே இறந்தது என்பது முதல் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
விசாரணை அதிகாரிகளும் பலமுறை விஷம் அருந்தியதால் மரணம் நிகழ்ந்தது என்ற உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஏறக்குறைய ஒரு வருடமாக நடைபெற்று வந்த விசாரணையின் நோக்கத்திற்காக ஐந்து பேர் கொண்ட நிபுணர் மருத்துவக் குழுவை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினேஷ் ஷாப்டரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று தடயவியல் நிபுணர்கள் குழு பரிந்துரைத்தது, அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
தினேஷ் ஷாப்டர் பொரளை மயானத்தில் காரில் கைகள் கட்டப்பட்டு கழுத்தில் பிளாஸ்டிக் பேண்டில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அவர் உயிரிழந்தது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.