இலங்கை முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களுக்கு தயாராகும் அரச ஊழியர்கள்
இலங்கையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி போராட்டங்கள் இடம்பெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரசாங்க சேவைகள் உட்பட பலர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இன்று பகல் 12.00 மணிக்கு மதிய உணவு வேளையில் இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.
தொழிற்சங்க போராட்டங்களை ஒடுக்குவதே அரசாங்கத்தின் அடுத்த முயற்சி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் (31) தமது சேவையிலிருந்து விலகி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தொடர்ந்தும் அதிகாரிகள் தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கத் தவறியதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் .ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.