காசா போர்நிறுத்தத்திற்கான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம்
காசா பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
அதன்படி தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளன. 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இருப்பினும், காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தரைப்படை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காசா முனையின் வடக்கு எல்லையில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல்களுக்கு இஸ்ரேல் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே காசா பகுதியில் தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணைய இணைப்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக காசா வாசிகளின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால், ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களுக்கு நடுவே காசா பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு இடமில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எகிப்தின் ரஃபா எல்லை, காசாவிலிருந்து வெளியேறும் இடமாகும், இது இஸ்ரேலிய பகுதிகளைத் தவிர, காசா பகுதிக்குள் நுழையும் உதவிக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.