அஞ்சல் இணையதளம் போன்ற போலி இணையதளம் – பல லட்சம் மோசடி
தபால் துறையின் இணையதளத்தை போன்று இணையதளம் அமைத்து கூரியர் சேவை வழங்குவதாக கூறி ஆன்லைன் வங்கி முறை மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கு பணத்தை மோசடி செய்தமை குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (25) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இந்த விடயத்தை அறிக்கை செய்தது.
தபால் மா அதிபரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த மோசடியில் தபால் துறை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா அல்லது வெளியாட்கள் செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி, பணத்தை வரவு வைத்து கணக்குகள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்குமாறு வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளருக்கு ஒரு பார்சல் கிடைத்ததாக அவர்களின் கைபேசியில் குறுஞ்செய்தி வரும், அந்த செய்தியின் மூலம் சம்பந்தப்பட்ட இணையதளத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படும்.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல் ஆன்லைனில் பெறப்பட்டது. அப்போது அந்த தகவல் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கு பணம் லட்சக்கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
225,918.36 ரூபா மற்றும் 297,130.81 ரூபா மோசடி தொடர்பில் இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விடயங்களை பரிசீலித்த நீதவான், கணக்குகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.