மாடுகளை கடத்துபவர்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்க தீர்மானம்
மாடுகளை கடத்துபவர்களுக்கான அபராதத் தொகையை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன், இவ்வாறான திருட்டுக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சின் கூற்றுப்படி, தற்போதைய விலங்குகள் நலச்சட்டத்தின்படி கால்நடை கடத்தப்படுவதற்கான அதிகபட்ச அபராதம் 50,000 ரூபாவாகும், மேலும் சிறைத்தண்டனை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அதன்படி விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கால்நடை அபிவிருத்தி பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது கறவை மாடுகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் வேண்டுகோளுக்கிணங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விலங்குகள் நலச் சங்கப் பிரதிநிதிகள் குழுவுடன் நடத்திய கலந்துரையாடலில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.