Updated – 8 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது: வெளியான புதிய தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி தலைமன்னார் சர்வதேச இந்திய கடற்பகுதியில் எல்லை தாண்டி வந்ததாக கோரி இலங்கையைச் சேர்ந்த எட்டு மீனவர்களை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மற்றும் 4 பைபர் படகுகளையும் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இக்கைது நடவடிக்கையின் போது, அதே இடத்தில் சந்தேக படும் படி சுற்றி திரிந்த தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் ஒரு நாட்டு படகினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காவல் படை அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணையிணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிடிபட்ட தமிழக நாட்டுப் படகில் சுமார் 500 கிலோ கடத்தல் மஞ்சள் மற்றும் 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை இருந்துள்ளது.
மேலும் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து தமிழகத்தை சேர்ந்த நான்கு மீனவர்களையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் கடலோர காவல் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்,
மேலும் பிடிபட்ட இலங்கையை சேர்ந்த எட்டு மீனவர்களை மண்டபம் கடலோர காவல் குழும போலீசாரிடம் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்,
தகவல் அறிந்த மண்டபம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு வந்த கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் ஹரிஹரன் இலங்கையை சேர்ந்த நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்,
மேலும் ஒரே நாளில் இலங்கை சேர்ந்த நான்கு பைபர் படகும் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாட்டு படகும் பிடிபட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் சூழலில் கடத்தல் தங்கம் ஏதேனும் கொண்டு வந்தார்களா அல்லது ஏதேனும் போதை பொருள் கடத்தப்பட்டதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் இலங்கை இந்திய மீனவர்களிடம் பேலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை நான்கு படகுகளுடன் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் படகுகளுடன் மண்டபம் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு மண்டபம் மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எட்டு மீனவர்களும் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க வந்ததாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து சர்வதேச கடல் எல்லையில் மேற்கொண்ட நடவடிக்கையில் இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் சமையல் மஞ்சள் கடத்திய மண்டபத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கபட்டுள்ளது.