புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்தி மோசடி
புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட இலத்திரனியல் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 7 வாகனங்கள் சுங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உரிய அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை 119 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 75 வாகனங்கள் அதே நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரசாங்கம் இழந்த வருமானம் சுமார் 35 பில்லியன் ரூபா என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
குறைமதிப்பீடு, முறைகேடு, உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வரி செலுத்தாமை மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் பணத்தில் குறித்த வாகனங்கள் உண்மையில் இறக்குமதி செய்யப்பட்டதா என்ற நான்கு விடயங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒக்டோபர் இறுதிக்குள் அனைத்து பாக்கிகளையும் செலுத்துமாறு மதுபான நிறுவனங்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.