CWC – பாகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 58 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் 40 ரன்களுடனும், ஷாகீன் ஷா அஃப்ரிடி 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக், முகமது நபி, ஒமர்சாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் அரைசதம் அடித்து அசத்தினர்.
இந்த ஜோடி முறையே 65 மற்றும் 87 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹமத் ஷா 77 ரன்களை அடித்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் ஹஷ்மதுல்லா சிறப்பாக விளையாடி 48 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.