இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராகவுள்ளது – அதிபர் ஜோ பைடன்!
ஹமாஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் 12வது நாளாக நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றடைந்தார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, காஸா பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்க ராணுவ ரீதியில் உதவி செய்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கவும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார். அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ‘‘இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவை தெரிவிக்கிறது. இஸ்ரேல் என்ன உதவிகள் கேட்கிறதோ அதை செய்யத் தயாராக இருக்கிறோம். ஹமாஸ் தீவிரவாதிகள் நாஜிக்களைப் போல செயல்படுகின்றனர். தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும். போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கவலைக்குரியது. பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஹமாஸ் தீவிரவாதிகள் போராடவில்லை. இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜோர்டான் செல்ல இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
இதனிடையே, காஸாவில் அல் அஹ்லி மருத்துவமனை மீது நேற்று இரவு நடந்த ராக்கெட் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், தீவிரவாதிகளே தாக்குதல் நடத்தியதாக கூறும் இஸ்ரேல் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.