90 ஆண்டுகள் தாமதமாக நூலகத்துக்கு திரும்பிய இரவல் புத்தகம்… விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?
நியூயார்க் பொது நூலகம் ஒன்றில் இரவல் பெறப்பட்ட புத்தகம் 90 ஆண்டுகள் கழித்து தாமதமாக நூலகத்துக்கு திரும்பியது. அதற்கு தாமத கட்டணமாக நூலகம் விதித்த அபராதம் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
நூலகமோ, தனிநபரோ இரவலாக பெறப்பட்ட புத்தகம் தனது இருப்பிடத்துக்கு திரும்புவதில் காலதாமதம் ஆவது சாதாரணமானது. ஆனால் 90 ஆண்டுகள் கழித்து ஒரு புத்தகம் அதன் நூலகத்துக்கு திரும்பி இருப்பது அசாதாரணமானது இல்லையா? அப்படி நியூயார்க்கில் நிகழ்ந்திருக்கும் இந்த சம்பவத்தில் சுவாரசியமும் சேர்ந்திருக்கிறது.நியூயார்க்கின் லார்ச்மாண்ட் பொது நூலகத்தில் இருந்து இரவல் பெறப்பட்ட, ஜோசப் கான்ராட் கதைகளின் தொகுப்பு என்ற நூல் 90 ஆண்டுகள் கழித்து அதன் அலமாரிக்கு திரும்பியிருக்கிறது.
1933, அக்டோபர் 11 அன்று இரவல் பெறப்பட்ட அந்த புத்தகம், அதற்கான காலக்கெடு முடிந்த 30 நாட்களுக்குள் நியூயார்க் நூலகத்துக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அந்த நூலை இரவல் பெற்றுச் சென்ற ஜிம்மி எல்லிஸ் எப்படியோ அதனை மறந்து விட்டார். அவர் இறக்கும் வரை(1978) அந்த புத்தகம் நூலகத்துக்கு திரும்பவில்லை. ஜிம்மி எல்லிஸ் இறந்ததும் அவரது உடமைகளில் ஒன்றாக மேற்படி புத்தகத்தையும் கட்டி பரணில் வீசிவிட்டார்கள்.
ஜிம்மி எல்லிஸின் பேத்தியான ஜோனி மோர்கன் அண்மையில் வீட்டை ஒழுங்கு செய்யும்போது அந்த அழகான புத்தகத்தை கண்டெடுத்தார். சுமார் 90 ஆண்டுகளாக தனது நூலகத்தை விட்டுப் பிரிந்திருக்கும் அந்த புத்தகத்தை திருப்பி சேர்ப்பது என முடிவு செய்தார். அதன்படி நியூயார்க் நூலகத்தை தொடர்பு கொண்டு பேசியபின், புத்தகத்தை அனுப்பி வைத்தார்.
புத்தகம் திரும்பப் பெறப்பட்டதும் முதல் வேலையாக, இரவல் நூலுக்கான தாமதக் கட்டணத்தை நூலக அலுவலர்கள் கணக்கிட்டனர். தினத்துக்கு 20 சென்ட் என்றளவில் சுமார் 90 ஆண்டுகளுக்கு அமெரிக்க டொலர் மதிப்பில் 6,400 அபராதமாக வந்தது. இது தொடர்பான தகவலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த நூலக நிர்வாகம், 6400 டொலருக்கு பதில் 5 டொலர் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தது.
நூலக விதிமுறைகளின்படி புத்தகம் இரவல் பெறப்பட்ட 30 நாட்களைக் கடந்ததும், அது தொலைந்து போனதாக கணக்கில் ஏறும். அந்த வகையில் திரும்பக்கிடைத்த புத்தகத்தின் ஆரம்ப விலையான 5 டொலர் மட்டுமே அதனை இரவல் பெற்றவரின் உறவினரிடம் கோரப்பட்டது.