AI தொழில்நுட்பத்தால் காத்திருக்கும் ஆபத்து
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் ஸ்மார்ட் போனில் உள்ள அசிஸ்டன்ட் முதல் தானாக ஓடும் கார்களில் பயன்படுத்தப்படும் அல்காரிதம் வரை நம் வாழ்வில் பயன்படுத்தும் அனைத்திலுமே அங்கமாகிவிட்டது. இதனால் பல நேர்மறை மாற்றங்கள் உலகில் நிகழும் என்றாலும், அதன் ஆபத்து குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளது. AI நீங்கள் நினைப்பதை விட பல ஆபத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் முக்கியமான ஆபத்துகளில் ஒன்றாக சார்பு மற்றும் பாகுபாடு பார்க்கப்படுகிறது. அதாவது இந்த தொழில்நுட்ப அமைப்புகள் தங்களுக்கு என்ன பயிற்றுவிக்கப்படுகிறதோ அது சார்ந்த முடிவுகளை மட்டுமே எடுக்கும். ஒருவேளை இதற்கு தவறான விஷயங்களை ஒருவர் பயிற்றுவித்தாலோ, அல்லது போதிய விஷயங்களை இதற்கு பயிற்றுவிக்கவில்லை என்றாலோ, இதை பயன்படுத்தும் இடங்களில் ஒரு சார்பாக அல்லது பாகுபாட்டுடன் இது செயல்பட வாய்ப்புள்ளது.
AI மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களின் விரைவான முன்னேற்றத்தால் பலரது வேலை பறிபோகும் என்ற கவலைகள் எழுந்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தால் தொழிற்சாலைகளில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்றாலும், சில துறைகளில் அதிகப்படியான வேலை இழப்புக்கு வழிவகுக்கும். இது பொருளாதார சமநிலையின்மையை ஏற்படுத்தும்.
அதிக நுட்பத்துடன் செயல்படக்கூடிய சைபர் தாக்குதல்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யலாம். இதனால் மிகப்பெரிய பாதுகாப்பு அபாயம் உள்ளது. உதாரணத்திற்கு போலியான வீடியோ, ஆடியோ பதிவுகளை உருவாக்குவது, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் ஒருவது முகத்தை வேறு ஒருவரது போல மாற்றுவது போன்ற பல தவறான செயல்களுக்கு இதைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது.
அடுத்ததாக AI-ஆல் இயங்கும் தானியங்கி ஆயுதங்களின் வளர்ச்சியால் பல பாதிப்புகள் ஏற்படுமோ என்ற கவலைகள் எழும்புகிறது. மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல் முற்றிலும் AI மட்டுமே கட்டுப்படுத்தும் ஆயுதங்கள் உலகிற்கு உண்மையிலேயே மிகவும் ஆபத்தானவை. இதனால் உலக அழிவு கூட ஏற்படலாம்.
இப்படி நாம் நினைத்துப் பார்க்காத பல பாதிப்புகளை AI தொழில்நுட்பம் ஏற்படுத்தலாம். எனவே இதை யாரும் தவறாக பயன்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளையும், மக்களுக்கு முறையான கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.