நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; டெல்லிவரை அதிர்வு!
நேபாளத்தை மையமாகக் கொண்டு 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”நேபாளத்தில் இன்று மதியம் 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லியிலும், ராஜஸ்தானிலும், வடக்கு உத்தரபிரதேசத்திலும், உத்தரகாண்ட்டிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்கள் என கட்டிடங்களுக்குள் இருந்த பலர், அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து வெளியே வந்துள்ளனர்.