வரியை நீக்கினால் 650 ரூபாய்க்கு பால் மாவை விற்பனை செய்ய முடியும்
பால் மா இறக்குமதிக்காக 600-650 ரூபா வரை வரியாக செலுத்த வேண்டியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வரிகள் நீக்கப்பட்டால் ஒரு பால் மா பொதியை 600-650 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் மாவுக்கு 10 சதவீத புதிய வரியை விதிக்க வர்த்தக அமைச்சு அண்மையில் தீர்மானித்துள்ளது.
உள்ளூர் பால் உற்பத்தியின் வினைத்திறன் மற்றும் பால் உற்பத்தித் திட்டங்கள் தோல்வியடைந்தமையினால் நாட்டின் அப்பாவி மக்கள் பலியாக வேண்டியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
ஒரு கிலோ பால் மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது 225 ரூபா வரியாக செலுத்தப்படுகிறது. VAT ஆக வசூலிக்கப்படும் தொகை 165 ரூபாய் ஆகும்.
சமூக பாதுகாப்பு வைப்புத் தொகையாக 55 ரூபாயும், துறைமுகம் மற்றும் விமான சேவை வரியாக 122 ரூபாயும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செலுத்தப்பட்ட மொத்த வரித் தொகை 567 ரூபாய்.
இந்த வரிகள் நீக்கப்பட்டால் 2 கோடி மக்களின் போசாக்குக்கு குறைந்த விலையில் ஒரு பால் மா பொதியை வழங்க முடியும் என லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்தார்.