ஏசி அறையிலும் வியர்க்கிறதா? நடுத்தர வயது இளைஞர்களுக்கு எச்சரிக்கை
முப்பது வயதுக்கு மேல் அனைவருக்குமே அதிகப் பணிச்சுமைகள் வந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். நடுத்தர வயதில் இருப்பவர்கள் சொந்தத் தொழில், அலுவலக வேலை என மும்முரமாக இயங்கிக் கொண்டிருப்பர். இவர்களது கவனம் வேலையிலேயே இருப்பதால் உடல் நலத்தை குளித்து அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், இந்தக் காலகட்டத்தில் நமக்கே தெரியாமல் நம் உடலில் பல மாற்றங்கள் உண்டாகும்.
இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இரத்த சர்க்கரை அளவு மாறுபாட்டைச் சொல்லலாம். குடும்பத்துக்காக அதிகமாக ஓடி உழைக்கும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குவது கடினமாகும். இவர்களது வாழ்க்கை முறை வேலை, உணவு, தூக்கம் என இருக்கும். தினசரி ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். இதுபோல் மோசமான உணவு முறை, முறையாக உடற்பயிற்சியை பின்பற்றாமல் போவதால் நடுத்தர வயதினரை நீரிழிவு நோயும், உடற்பருமனும் அதிகம் தாக்க வாய்ப்புள்ளது.
இதில் சிலர், ‘எங்கள் பரம்பரையில் நீரிழிவு நோய் கிடையாது’ என அலட்சியமாக இருப்பர். இது முற்றிலும் தவறு. இந்த நோய் உழைப்பில்லாத நடுத்தர ஆண்களையும் பெண்களையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பற்றிக் கொள்ளலாம். இதில் முக்கியமான அறிகுறி என்னவென்றால், திடீரென உடலில் உண்டாகும் அதிக வியர்வை. எப்போதும் உங்களுக்கு இல்லாத வகையில் திடீரென அளவுக்கு அதிகமாக வியர்வை ஏற்பட்டால், அது நீரிழிவு நோயின் ஆரம்பக்கட்டமாக இருக்கலாம். உடலின் சர்க்கரை அளவு உடனடியாக மாறுபடுவதால் வியர்வை சுரப்பிகள் சரியாக வேலை செய்யாமல் போகிறது. நமக்கு அதிகமாக வெப்பம் தாக்கினால் மட்டுமே வியர்வை சுரப்பிகள் அதிக வியர்வையை வெளியிடும். இதனால் நமது சருமம் குளிர்ச்சியடைகிறது. ஆனால், இரத்த சர்க்கரை அளவு மாறுபடும்போது ஒருவர் ஏசி அறையில் இருந்தாலும் அவருக்கு வியர்க்கத் துவங்கும். ஒரு சிறிய வேலை செய்தாலும் அதிகமாக வியர்வை வெளியேறும்.
நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். நீங்கள் உடலுக்கு அவ்வப்போது வேலை கொடுத்தால் மட்டுமே இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால் அதைத் தொடர்ந்த உடலில் பல பாதிப்புகள் ஏற்படும் என்பதால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை காட்டுங்கள்.