ChatGPTஇல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்!
OpenAi நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ChatGPT தற்போது பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு காரணமாக அமைந்து வருகிறது. அந்த நிறுவனமும் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக பல புதிய அப்டேட்களை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். அதன்படி தற்போது ChatGPT-ல் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பம் நாம் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்கான துல்லியமான பதில்களை கொடுத்து அசர வைத்து வரும் நிலையில், இப்போது வாய்ஸ் உரையாடல் அம்சம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது பயனர்களால் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி இனி ChatGPT-யுடன் உரையாட முடியும். இனி இதைப் பயன்படுத்தி புதிய கதைகளை கேட்கவும், இரவு நேரத்தில் ஜாலியாக உரையாடவும், சாப்பிடும்போது விவாதிக்கவும் இந்த அம்சம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்தப் புதிய அம்சத்தை ஆக்டிவேட் செய்வதற்கு ChatGPT செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, அதில் புதிய அம்சங்கள் என்பதைத் தேர்ந்தெடுத்தால், அதில் மொத்தம் ஐந்து விதமான குரல் தேர்வுகள் இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான குரல் எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்யலாம். இதில் கூடுதல் அம்சமாக நாம் பேசும் உரையாடலை ஒட்டுமொத்த உரையாடலாக மாற்றி ஒன்றாகக் கேட்க முடியும்.
இதையடுத்து மற்றொரு புதிய அம்சமாக புகைப்படத்தை உள்ளீடு செய்தால் அதுபற்றிய விவரங்களை ChatGPT உடனடியாகத் தந்துவிடும். இந்த இரண்டு அம்சங்களையும் பெறுவதற்கு நீங்கள் ChatGPT Plus பயனராக இருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இருவருமே அணுகக்கூடிய வகையில் இந்த புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய அம்சங்களால் அபாயங்களும் இருக்கிறது என்பதால், பயனர்களின் தனியுரிமையை இது பாதிக்காத வண்ணம் பகுப்பாய்வு செய்வதற்கும், நேரடி அறிக்கையில் வெளியிடுவதற்கும் பல நடவடிக்கைகளை OpenAi நிறுவனம் எடுத்துள்ளது. அடுத்தடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்புகளில் இதன் பாதுகாப்பு அம்சங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.