காலநிலை செழிப்பு திட்டத்திற்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை : ரணில்
இலங்கையின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு 2030 ஆம் ஆண்டளவில் 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்ட.
இன்றைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வு காணும் உயர்மட்ட உலகளாவிய முயற்சியான “பெர்லின் குளோபல்” மாநாடு இன்று (28.09) ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் காலநிலை செழிப்பு திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு 2030 ஆம் ஆண்டளவில் 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும், கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச நிதியைக் கொண்டு இலங்கை அதனைக் கையாள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகப் பொருளாதாரம் பல மாற்றங்களைக் கண்டுள்ளதாக தெரிவித்த அவர், உலகப் பொருளாதாரம் ஐரோப்பிய கடன் நெருக்கடி, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சிகள் உள்ளிட்ட தொடர் நெருக்கடிகளை சந்தித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
“நவீன வரலாற்றின் வேறு எந்த காலகட்டத்திலும் இதுபோன்ற நெருக்கடியை நாம் சந்தித்ததில்லை என்றும், அவர் கூறியுள்ளார். அத்துடன் “ஐரோப்பாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி இவ்வருடம் இதுவரையில் அதிகரிக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.