எலான் மஸ்கின் புதிய திட்டம் – மனித மூளையில் சிப் பொருத்த அனுமதி
மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்யும் எலான் மஸ்கின் Neuralink நிறுவனத்திற்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
மனித மூளையில் சிப் பொருத்தி மனிதர்களிடம் சோதனை செய்வதற்கு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்கலாம் என Neuralink நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த தொழில்நுட்பத்தால் நினைவாற்றல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்தது. தற்போது இந்த ஆய்வுக்காக அரசின் அனுமதி கிடைத்த நிலையில், இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித மூளையில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தி, அதை கணினி மூலம் கட்டுப்படுத்தும் Neuralink என்ற திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்திருந்தார். மேலும் இதனால் மனிதர்களின் பல நோய்களை குணப்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார். நினைத்துப் பார்க்கவே பயத்தை ஏற்படுத்தும் இந்த டெக்னாலஜி, முற்றிலும் வித்தியாசமானது. மனிதர்களின் தலையில் சிறிய துளை போட்டு, சிப் பொருத்தி, அவர்களை கணினி மூலம் கட்டுப்படுத்துவதை பல ஹாலிவுட் படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அவர்களுக்கு கணினி மூலம் சிறிய கட்டளை கொடுத்தால் போதும் அதை அப்படியே செய்வதுபோல பல திரைப்படங்கள் வந்துள்ளது. இதுவரை நீங்கள் படங்களில் மட்டுமே பார்த்த விஷயம் தற்போது நிஜத்திலும் நடக்கப் போகிறது. ஆம் மனித மூலையில் சிப் பொறுத்தி, நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல விஷயங்களை செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
இதுவரை விலங்குகளிடம் மட்டுமே வெற்றிகரமாக செய்யப்பட்ட இந்த சோதனை, இனி மனிதர்களிடமும் சோதனை செய்யப்பட உள்ளது. இதுவரை 19 விலங்குகளில் இந்த சிப்பை வைத்து அந்த நிறுவனம் சோதனை செய்துள்ளது. அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை செய்ய அவர் அனுமதி கேட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் இச்சோதனை மனிதர்களிடம் நடத்தப்பட உள்ளது. அனைவருக்கும் இந்த தொழில்நுட்பம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்படி இதை சந்தைக்கு கொண்டு வருவோம் என எலான் மஸ்க் உறுதி அளித்துள்ளார்.