செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள விபரீதம்!
ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அறிமுகமானதிலிருந்தே உலகம் முழுவதும் வித்தியாசமாக மாறிவிட்டது எனலாம். எல்லா இடங்களிலும் இதைப் பற்றிய பேச்சுதான் அதிகம் நிலவுகிறது. நாம் எந்த கேள்வி கேட்டாலும் மனிதர்கள் போலவே சிந்தித்து பதில் கூறிவிடுகிறது. நாளுக்கு நாள் இதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. மேலும் ஆய்வுகள் செய்யவும், கட்டுரைகள் எழுதவும், ஓவியம் வரையவும் பலர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் உண்மையான எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.
ChatGPT-ஐ பயன்படுத்தி ஒரு புத்தகத்தை அந்த எழுத்தாளரின் அனுமதி இல்லாமலேயே அதன் சுருக்கத்தை நம்மால் பெற முடியும். இதுதான் தற்போது பிரச்சினையாக உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான மைக்கேல் சாபெல் மற்றும் அவருடன் சேர்ந்து சில எழுத்தாளர்கள், சான்பிரான்சிஸ்கோ ஃபெடரல் நீதிமன்றத்தில் OpenAI நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த வழக்கில் OpenAI நிறுவனம் ChatGPTஐ பயிற்றுவிப்பதற்காக தங்களுடைய படைப்புகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும் என்பதற்காக, ChatGPT செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவிக்க, எங்களின் படைப்புகளை பயன்படுத்தியுள்ளனர் என அந்த எழுத்தாளர்கள் கூறுகின்றனர். எனவே பதிப்புரிமை மீறலுக்கான வழக்கு OpenAI நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனத்தின் மீது பதிப்புரிமை மீறலுக்கான பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் நீதிபதி முன்னிலையில் நடந்து அவர்களுக்கான இழப்பீடும் தர வேண்டும் என்பது எழுத்தாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கிடையே செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சியளிக்க அவர்களின் அனுமதி இல்லாமல் தங்களின் நூல்களை பயன்படுத்தக்கூடாது என, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து கடிதம் எழுதியுள்ளனர்.
இவைகள், தங்களின் எழுத்து நடை, கதைகள் மற்றும் சிந்தனைகளுக்கு போலியான வடிவம் கொடுப்பதாகவும், அதற்கான வெகுமதி எதுவும் எங்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் எழுத்தாளர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் எழுத்தாளர்களின் நிலை மோசமாக மாறிவிடும் என சொல்லப்படுகிறது.