இந்தியாவில் ஒரு மாநிலத்தை ஒரு கொடிய வைரஸ் உலுக்கி வருகிறது
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்ட மற்றொரு சிறு குழந்தை உட்பட பல நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 700க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
கேரள மாநிலத்தில் உள்ள பல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன, பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவுவது இது 04 வது முறையாகும். 2018 ஆம் ஆண்டில், கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 23 பேரில் 21 பேர் உயிரிழந்தனர்.