பிரான்ஸ் அபாயா தடை: பள்ளி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது
பிரான்ஸ் பள்ளிகளில் மாணவிகள் அபாயா அணிய தடை விதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் அரசு, கடந்த மாதம், பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் அபாயா என்னும் உடலை மறைக்கும் அங்கியை அணிய தடை விதித்தது. அது கல்வியில் மதச்சார்பின்மை விதிகளை மீறுவதாகக் கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பள்ளி துவங்கிய முதல் நாள் அன்று, சுமார் 300 இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு அபாயா அணிந்துவந்துள்ளனர். அவர்களில் பலர் அதை அகற்ற ஒப்புக்கொண்ட போதிலும், 67 மாணவிகள் அபாயாவை அகற்ற மறுத்துள்ளனர். ஆகவே, அவர்கள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சரான Gabriel Attal தெரிவித்திருந்தார்.
அவ்வகையில் திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மாணவியின் தந்தை, பள்ளியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவர் பள்ளி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த விடயத்தை பிரான்ஸ் கல்வித்துறை அமைச்சரான Gabriel Attal, கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பள்ளி முதல்வருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.