மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பொன்றில் இணைந்த பிரித்தானியா
தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் தொகை வழங்குகிறோம். ஆனால், தங்களுக்கு அதனால் எந்த பலனும் இல்லை என்று என்ணி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரித்தானியா.அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் அதன் பட்ஜெட்டுக்கு ஆண்டுதோறும் ஒரு தொகையை வழங்கவேண்டும். இந்த தொகை நாட்டுக்கு நாடு மாறுபடும்.அதேபோல, தேவையிலிருக்கும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவி செய்யும். ஒரு கட்டத்தில், பிரித்தானிய தரப்பில் பெரும் தொகை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்படுகிறது, ஆனால், பதிலுக்கு பிரித்தானியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் குறைவாக உள்ளனவே என்னும் எண்ணம் பிரித்தானியர்களுக்கு உருவானது.
இதுபோக, செழிப்பான பொருளாதாரம், குற்றங்கள் மற்றும் தீவிரவாதத்துக்கெதிராக பாதுகாப்பு, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொது சேவைகள் திறம்பட நடைபெறுதல் என பல்வேறு விடயங்களை ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு, நிதி வழங்கும் உறுப்பு நாடுகளுக்கு உள்ளது நியாயம்தான். ஆனால், பிரித்தானியா எதிர்பார்த்த நன்மைகள் திருப்திகரமான வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து அதற்கு கிடைக்கவில்லை.
சில பிரச்சினைகளை பார்த்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரித்தானியா. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் சில இழப்புகளையும் பிரித்தானியா எதிர்கொள்ள நேர்ந்தது. கொரோனா காலகட்டம், பொருளதார பிரச்சினைகள் ஆகியவற்றுடன், மற்றொரு முக்கிய விடயத்தை இழந்தது பிரித்தானியா.அதாவது, ஐரோப்பிய ஒன்றியம் சில முக்கிய ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அவற்றில் ஒன்று Horizon, மற்றொன்று Copernicus.
இந்த Horizon என்பது அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வமைப்பு, Copernicus என்பது புவி ஆய்வு தொடர்பான ஒரு ஆய்வமைப்பு.பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று, பிரித்தானியா இந்த ஆய்வமைப்புகளில் பங்கேற்க வழிவகை செய்தாலும், வட அயர்லாந்து ஒப்பந்தம் அதற்கு தடையாக அமைந்தது. ஆகவே, கடந்த மூன்று ஆண்டுகளாக பிரித்தானியாவால் இந்த ஆய்வமைப்புகளில் பங்கேற்கமுடியாமல் போனது. அறிவியல் துறையைப் பொருத்தவரை அது ஒரு பெரிய இழப்பு.
இந்நிலையில், நேற்று மீண்டும் பிரித்தானியா அந்த அமைப்புகளில் இணைந்துள்ளதால் அறிவியலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.அந்த ஆய்வமைப்புகளில் இணையும் வகையில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.இனி பிரித்தானிய அறிவியலாளர்களும், நிறுவனங்களும் அந்த அமைப்புகளிலிருந்து ஆய்வுகளுக்காக நிதி முதலான உதவிகள் கோரலாம். ஆனாலும், அது இலவசம் அல்ல. அதற்காக, பிரித்தானியா, ஆண்டொன்றிற்கு சுமார் 2.2 பில்லியன் பவுண்டுகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.