மொரந்துடுவ பிரதேசத்தில் பெண்களிடம் அத்துமீறிய போலி பொலிஸ்
வலான ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர் என போலி அடையாள அட்டையை காட்டி பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் மொரந்துடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்தோடு பெண்களிடம் தங்க நகைகள் மற்றும் பணத்தையும் சந்தேகநபர் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் குருநாகல் வீரம்புகெதர பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ஹங்வெல்ல, தெடிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் கடந்த முதலாம் திகதி மொரந்துடுவ பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு முறைப்பாடு செய்த பெண்ணை அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டு அதனை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.பின்னர், தான் பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எனக் கூறி பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை காட்டி, அவரது கழுத்தில் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இது குறித்து பின்னர் பொலிஸில் குறித்த பெண் முறையிட்டுள்ளார்.பொலிஸார் விசாரணைக்காக குறித்த விடுதிக்கு சென்ற போது சந்தேகநபர், வேறு ஒரு பெண்ணுடன் அங்கு தங்கியிருந்துள்ளார்.பம்பலப்பிட்டி, கல்கிஸை மற்றும் பாணந்துறை உள்ளிட்ட பொலிஸ் அதிகார எல்லைகளிலும் சந்தேகநபருக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிற நிலையில், சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.