அடிப்படை மருந்துகள் கூட இல்லாத நிலை: அதிகளவிலான மரணங்கள் சம்பவிக்கலாம்- வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
மூதூர் தள வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாமையினால் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் திருகோணமலை-மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டொக்டர் இளங்கோவன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணர் கடமையில் இருப்பதாகவும் இதனால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்டுள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் பத்து விசேட வைத்தியர்களும், 20 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கிண்ணியா, மூதூர்,கந்தளாய் போன்ற வைத்தியசாலைகளில் 15 விசேட வைத்திய நிபுணர்களும், 27 வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மூதூர் தள வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாமையினால் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், மூதூர் வைத்தியசாலையில் ஒரு மாதத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிறப்புகள் நிகழ்கின்றது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவிலான பிறப்புகள் நிகழ்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீரிழிவு நோய், உயர் குருதி அமுக்கம் போன்றவற்றிற்குரிய அடிப்படை மருந்துகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவிலான மரணங்கள் சம்பவிக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.