இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த விலை உயர்வு நேற்று (31.08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.
அதேபோல் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 417 ரூபாவாகும்.
ஆட்டோ டீசலின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 341 ரூபாவாகும். சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 359 ரூபாவாகும்.
மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 231 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் உள்ளூர் துணை நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (LIOC), CEYPETCO இன் திருத்தப்பட்ட விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கான முடிவை அறிவித்தது.
இதற்கிடையில், பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான சினோபெக், சந்தை ஊக்குவிப்பு பிரச்சாரத்துடன், இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.