காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு – நால்வர் கைது
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுக்க கடந்த 26 ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் 4,930 ஆண்களும் 1,471 பெண்களும் என 6,401 பேர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வின் போது பாதுகாப்பு பணியில் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சத்யபிரியா தலைமையில் 615 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனர்.
திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தை சேர்ந்த லாவண்யா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரது கணவர் சென்னை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்க்கும் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது பெயர் சுமன். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி தேர்வு எழுது சென்ற அவர் 25 நிமிடங்கள் கழித்து தான் கர்ப்பிணி என்று கூறி இயற்கை உபாதைக்காக செல்வதாக கூறி வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றை மறைத்து வைத்துக் கொண்டு சென்றார்.
ஏற்கனவே கழிவறையில் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் செங்கம் அடுத்த கொட்டப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பிரவின்குமார் செல்போனுக்கு கேள்வித்தாளை அனுப்பி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து கேள்வித் தாளில் உள்ள வினாக்களுக்கு விடையை எழுதி உடனடியாக லாவண்யாவின் செல்போனிற்கு மீண்டும் அனுப்பி உள்ளார்.
பின்னர் தான் கொண்டு வந்த விடைத்தாளில் விடைகளை பூர்த்தி செய்து செல்லும் பொழுது அறைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் லாவண்யா மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை சோதனை செயத்ததில் அவர் விடைத்தாளை மறைத்து கழிவறைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
அதில் அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தேர்வு பணியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐஜி சத்தியபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு லாவண்யாவை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றினர்.
காவல் துறை சார்பில் நடத்தப்படும் உதவி ஆய்வாளர் தேர்வில், காவல் உதவி ஆய்வாளர் மனைவி இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் வெறையூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மோசடி செய்தல், சீட்டிங் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முறைகேடாக நடந்த தேர்வு எழுதிய லாவண்யா தனது அதிகாரத்தை பயன்படுத்தி மனைவிக்கு முறைகேடாக உதவி செய்த அவரது கணவர் சுமன், செல்போன் மூலமாக அனுப்பப்பட்ட செய்திதாளுக்கு விடை எழுதி அனுப்பிய மருத்துவர் பிரவின்குமார், செல்போனை கழிவறையில் கொண்டு செய்து வைக்க உதவிய காவல் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல் துறை உதவி ஆய்வாளரே தனது மனைவியை முறைகேடாக தேர்வு எழுத வைத்து தற்போது கம்பி எண்ணும் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.