கனடாவில் இந்தியர் மீது 17 முறை கத்தி குத்து தாக்குதல்..!
கனடாவில் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற இந்தியர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட விடயம், அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
கனடாவின் கிரேட்டர் ரொரன்றோ ஏரியாவில் வாழ்ந்துவந்த தனது மகன் குடும்பத்தைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து வந்துள்ளார் திலீப் குமார் (66). அஹமதாபாதைச் சேர்ந்த திலீப் குமார், தன் மகனுடைய குழந்தையான தனது ஒன்றரை வயது பேத்தியுடன் வாக்கிங் செல்வது வழக்கம்.அப்படி கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலை தன் பேத்தியுடன் செல்லும்போது, திடீரென, Noah Denyer (20) என்பவர் திலீப் குமாரைத் தாக்கத் துவங்கியுள்ளார்.
உதவி, உதவி என சத்தமிட்ட திலீப் குமார், அந்த நிலையிலும் தன் பேத்தியை விடாமல் பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார். சத்தம் கேட்டு திலீப் குமாரின் மருமகளான டிம்பிளும் அந்த பகுதி மக்களும் ஓடி வர, தாக்குதல்தாரி தப்பியோடியுள்ளார்.முகம், கழுத்து, மார்பு என 17 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு திலீப் குமார் இரத்த வெள்ளத்தில் கிடக்க, தங்கள் சட்டைகளைக் கழற்றி இரத்தத்தை நிறுத்த முயன்றுள்ளார்கள் அப்பகுதி மக்கள்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திலீப் குமாருக்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது.தங்கள் பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடத்துள்ளதால், அந்த பகுதியில் வாழும் இந்தியர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் கொந்தளித்துப்போயுள்ளார்கள்.விடயம் என்னவென்றால், திலீப் குமாரைக் கத்தியால் குத்திய Noahவுக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளதால், திலீப் குமார் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளார்கள். மேலும், ஏன் அந்த நபர் திலீப் குமாரை கத்தியால் இப்படி கொடூரமாகக் குத்தினார் என்பதும் தெரியாதால் அவரது குடும்பம் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளது