சிங்க்கபூரில் தவறுதலாகத் தகனம் செய்யப்பட்டவரின் உடலால் ஏற்பட்ட விபரீதம்
சிங்க்கபூரில் தவறுதலாகத் தகனம் செய்யப்பட்டவரின் குடும்பத்தார் ஈமச்சடங்கு நிறுவனம் மீது வழக்குத் தொடுத்துள்ளது.
சம்பவம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி நடந்தது. 82 வயது கீ கின் தியொங் (Kee Kin Tiong) அதற்கு முன்தினம் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் embalming என்ற பதப்படுத்தும் நடைமுறைக்காக Century Products நிறுவனத்திடம் அனுப்பப்பட்டது. Harmony Funeral Care எனும் ஈமச்சடங்கு நிறுவனம் அங்கிருந்து உடலைத் தவறுதலாகப் பெற்றுக்கொண்டது.
அது சியா சூன் சுவான் (Chia Soon Chuan) என்பவரின் உடல் என்று அது எண்ணியிருந்தது. சியாவுக்குச் செய்யவேண்டிய இறுதிச் சடங்குகள் கீக்குச் செய்யப்பட்டன.
கீக்குக் கிறிஸ்துவ முறையில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. அவரது உடல் பின்னர் தகனம் செய்யப்பட்டது.
கீக்கு இறுதிச் சடங்கு தாவோ முறையில் நடைபெற்றிருக்க வேண்டும். அவரது உடல் 3 நாள்களுக்குக் கிடத்தி வைக்கப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்படவேண்டும்.
‘இறுதிச் சடங்கு செய்ய உடல் கூட இல்லை’ என்று கூறிய கீயின் குடும்பத்தார் 225,000 வெள்ளி இழப்பீட்டைக் கோரினர். கடந்த சில ஆண்டுகளாக அதிக மனவேதனைக்கு உள்ளானதாக அவர்கள் கூறினர்.