ஆஸ்திரியாவில் 20 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்
ஆஸ்திரியாவில் உள்ள பனியோடையில் சுமார் 20 ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் மிக வேகமாக உருகும் பனியோடையில் அது கண்டுபிடிக்கப்பட்டது.
பருவநிலை மாற்றத்தால் பனியோடைகள் அதிக வேகத்தில் உருகுகின்றன. அதன் விளைவாக உறைந்த மலையேறிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
மலையேறும் வழிகாட்டி ஒருவர் சடலத்தை 2,900 மீட்டர் உயரத்தில் கண்டுபிடித்ததாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
சடலத்தின் அருகே ஒரு பை இருந்தது. அதில் ரொக்கம், வங்கி அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்தன.
அவை 2001ஆம் ஆண்டில் அங்கு மாண்ட 37 வயது ஆடவருக்குச் சொந்தம் என்று நம்பப்படுகிறது.
மரபணுப் பரிசோதனை முடிவுகள் சில வாரங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 மாதங்களுக்கு முன்பு அதே பனியோடையில் மற்ற மனித உடல்பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
குறுகிய காலத்தில் சடலத்தையும் மனித உடல் பாகங்களையும் பனியோடையில் கண்டுபிடிப்பது அரிது என்று காவல்துறை அதிகாரி கூறினார்.