தங்கக்கடத்தல் வழக்கில் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது! என்ஐஏ அதிரடி
ரூ.9 கோடி தங்கக் கடத்தல் வழக்கில் 4 ஆண்டுகளாக வெளி நாட்டில் தலைமறைவாக இருந்த நபரை இண்டர்போல் உதவியுடன் இந்தியாவின் என்ஐஏ கைது செய்துள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர் மொஹபத் அலி. 2020-ல் சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கடத்தப்பட்ட 18.56 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றட்ட வழக்கில் இவர்தான் சூத்திரதாரி.
எமெர்ஜென்சி லைட்டுகளின் பேட்டரிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ9 கோடி பெறுமானமுள்ள தங்கக்கட்டிகள் பிடிபட்டன.
இந்த வழக்கு விசாரணையின் போது, 2020 செப்டம்பர் முதல் அவர் தலைமறைவானார். 2021-ல் மொஹபத் அலிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.
மேலும் இன்டர்போல் வாயிலாக ரெட் நோட்டீஸும் விடுக்கப்பட்டது. பின்னர் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், மொஹபத் அலிக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மிகவும் தேடப்படும் நபராக மொஹபத் அலியை அறிவித்ததுடன், அவர் குறித்து துப்பு தருவோருக்கு ₹2 லட்சம் பரிசும் அறிவிப்பானது. மொஹபத் அலியை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்மானித்ததுடன், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
இத்தனை பின்னணிகள் கொண்ட மொஹபத் அலியை 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று(ஆக.17) கைது செய்திருப்பதாக என்ஐஏ இன்று அறிவித்துள்ளது.