ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் – ஜப்பான் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்த விஷ்மா சந்தமாலியின் மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அனுமதியின்றி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக ஜப்பான் நீதி அமைச்சர் கென் சைத்தோ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜப்பானிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விசா விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஜப்பானின் நகோயாவில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் முறையான சிகிச்சை பெறாமல் 2021 ஆம் ஆண்டு விஷமா சந்தமாலி உயிரிழந்துள்ளார்.
எனினும் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷ்மாவின் மரணத்திற்கு குறிப்பிட்ட காரணம் இல்லாதது சிக்கலாக இருந்ததால், விஷ்மா தங்கியிருந்த அறையின் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு அவரது குடும்பத்தினர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜப்பானிய அரசாங்கம் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை விஷ்மாவின் அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இந்நிலையில், கடந்த வியாழன் அன்று ஜப்பானில் அவரது குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முதன்முறையாக ஊடகங்களுக்கு காட்சிகளை வெளியிட்டபோது அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியான நிலையில், நேற்று பிற்பகல் ஜப்பானிய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஜப்பானிய நீதி அமைச்சரிடம் ஊடக விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு பதிலளித்தவர்,
“இந்த வீடியோக்கள் அரசாங்கத்தால் சாட்சியமாக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் சுமார் 5 மணிநேரம் கொண்டவை, மேலும் இந்த வீடியோக்கள் நீதிமன்றத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளன.
இந்த வீடியோக்களின் ஒரு பகுதியை மனுதாரரால் அனுமதியின்றி எடிட் செய்து வீடியோக்கள் வழங்கப்பட்டுள்ளன. எடிட் செய்யப்பட்ட வீடியோக்களே ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விஷ்மாவின் மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியும் என ஜப்பானில் உள்ள இலங்கை தூதரக சுனில் கமகே தெரிவித்துள்ளார்.