ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி!
ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை மக்களவைத் செயலகம் வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் திகதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீா்ப்பு வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை சந்தித்து ராகுலுக்கு எம்பி பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
. மேலும் ராகுல் காந்தி எம்.பி. பதவி தொடர்பாக மக்களவை செயலருக்கும் காங்கிரஸ் கடிதம் அனுப்பியது.
இந்த நிலையில் ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதிநீக்கம் மீளப்பெறப்படுவது குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று முடிவெடுப்பார் என காங்கிரஸ் தகவல் தெரிவித்திருந்தது.
அதன்படி ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை மக்களவைத் செயலகம் இன்று வழங்கியுள்ளது.
இதையடுத்து அவர் வயநாடு எம்.பி.யாக தொடர்வார் எனவும் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மக்களவையில் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாக முதல் பேச்சாளராக ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
கடந்த மார்ச் 24ல் ராகுலின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் 136 நாட்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது.
இதனைத் தொடந்து நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் விதமாக பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி நாடாளுமன்றம் வந்தார். அவரை வரவேற்கும் விதமாக ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் ‘ராகுல் காந்தி ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பி வரவேற்றனர். ராகுல் காந்தியின் நாடாளுமன்ற மறுவருகையைக் கொண்டாடும் விதமாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செய்தார்.