பறிபோகும் அரச பணியாளர்களின் வேலை!
பாரிய அளவிலான அரச பணியாளர்களை சேவையில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச அளவில் வங்கி பரிவர்த்தனைகள் நின்றுவிட்டதை மறந்துவிடாதீர்கள். இப்படி ஒரு சர்வதேசப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை அனைவரும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டின் மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை நிறுத்த முடியாது. மோதலைத் தொடங்க இதுவே சிறந்த நேரம் என்று சிலர் நினைக்கலாம்.
மோதலை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமானத்துடன் சிந்திக்க வேண்டும். நமது நாட்டின் மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத்தை விரைவாக வழங்கவும், தொகையை அதிகரிக்கவும் இது ஒரு முயற்சியாக செய்யப்படுகிறது.
தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்த்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான பொறுப்பை அரச அதிகாரிகள் என்ற வகையில் நிறைவேற்றுங்கள். ஏராளமான அரச ஊழியர்களை விடுவிக்கவும்இ நீக்கவும் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. நாங்கள் அதை செய்யவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.