விவசாயத்திற்கு நீர் வழங்குவது குறித்து விசேட கலந்துரையாடல்!
விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (06) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கலந்துரையாடலுக்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் மகாவலி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வறட்சியான காலநிலை காரணமாக, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாய நிலங்களுக்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார சபைக்குட்பட்ட சமனல குளம் நீர்த்தேக்கத்தில் இருந்து அந்த விளைநிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி வளவ பிரதேச விவசாயிகள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் விநியோகம் தடைபடலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.