சூரியன் உதிப்பதைக் காண கனடா வந்ததாகக் கூறிய இளம்பெண்… ட்ரூ காலர் நிறுவனம் ஆதரவு
கனடாவுக்குக் கல்வி கற்பதற்காக வந்துள்ள இந்திய இளம்பெண் ஒருவரிடம், நீங்கள் எதற்காக கனடா வந்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட, அந்தப் பெண் கூறிய பதிலால் அவரை கடுமையாக கேலி செய்தனர் நெட்டிசன்கள்.
இந்தியாவை விட்டு வெளியேறுவது தனது கனவு என்றும், கனடாவில் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்ப்பதே தனக்குப் பிடித்த விடயம் என்றும் தெரிவித்திருந்தார் ஏக்தா என்னும் பெயர் கொண்ட அந்த பெண்.அந்த இளம்பெண் பேசும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், அவரைக் கிழித்து தொங்கவிடாத குறையாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அப்படியானால், சூரியன் உதிப்பதையும் மறைவதையும் இந்தியாவில் பார்க்கமுடியாதா என ஒருவர் கேள்வி எழுப்ப, மற்றொருவரோ, நான் ஒரு ஆண்டு கனடாவில் வாழ்ந்தேன், கோடை நன்றாக இருந்தது, ஆனால் குளிர்காலம் பயங்கரமாக இருந்தது என்று கூறியிருந்தார்.இப்படி ஏக்தா கடுமையாக விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ள நிலையில், பிரபல நிறுவனமான ட்ரூ காலர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான Alan Mamedi, ஏக்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
People really want to misunderstand her to make fun of her. This is not OK!! Ekta, don't listen to all these clowns making fun of you. I think you're cool and living the dream! When you're done with school, you're welcome to work at Truecaller in any of our offices around the 🌏 https://t.co/PuotNAMwKK
— Alan Mamedi (@AlanMamedi) August 3, 2023
Alan, சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மக்கள் ஏக்தாவை தவறாகப் புரிந்துகொண்டு அவரை கேலி செய்கின்றனர். இது சரியல்ல, ஏக்தா, அந்தக் கோமாளிகள் உங்களைக் கேலி செய்வதைக் கண்டுகொள்ளாதீர்கள். நீங்கள் கூலாக இருக்கிறீர்கள் என்றும், உங்கள் கனவுகளின்படி வாழ்கிறீர்கள் என்றும் நான் நினைக்கிறேன். உங்கள் படிப்பை முடித்ததும், நீங்கள் உலகின் எந்த நாட்டிலுள்ள ட்ரூ காலர் அலுவலகத்தில் விரும்பினாலும் பணி செய்யலாம் என்று கூறியுள்ளார்.
இப்படி Alan ஏக்தாவுக்கு ஆதரவு தெரிவிக்க, அதையும் விமர்சித்துள்ளார்கள் சிலர். பயோடெக் படித்த ஒருவருக்கு, ட்ரூ காலர் நிறுவனத்தில் வேலையா? நேர்காணல் கிடையாது, CV தேவையில்லை, இந்தியாவை விட்டதால் அவருக்கு வேலை வழங்குவீர்களா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரையும் விடவில்லை Alan. எங்கள் நிறுவனத்தில் பணி புரிய, நன்கு கற்ற, உயர்ந்த நோக்கங்களும், புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் கொண்ட ஒருவர் போதும், சொல்லப்போனால், எங்கள் நிறுவன CFO, ஒரு space physicist! என்று அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர்.