வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புதிய சாதனைகளை படைத்த இந்திய அணி
வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனைகளை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் 2019-ம் ஆண்டு அந்த அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.
மேலும் அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 13 ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றி மற்றொரு சாதனையை படைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2006-ம் ஆண்டு பிரைன் லாரா தலைமையில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடதக்கது.