பழி தீர்த்த ரஷ்யா – உக்ரைன் தானிய சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல்
உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் துறைமுகத்தின் அருகாமையில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கு ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக Izmail பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய ட்ரோன்கள் புறப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை எச்சரித்திருந்தது.
உக்ரைன் தானிய ஒப்பந்தம் ரத்தான பின்னர், தொடர்ந்து உக்ரைன் துறைமுகங்களையே, ரஷ்யா குறிவைத்து தாக்கி வருகிறது.இதில் தானிய சேமிப்பு கிடங்குகள் பல சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தாக்குதலும் துறைமுகப்பகுதி மற்றும் தொழில்துறை வசதிகள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவசர சேவைகள் பிரிவு தாக்குதல் நடந்த பகுதியில் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை ராணுவம் வெளியிடும் என்றே கூறுகின்றனர்.
தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு, உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை நோக்கிச் செல்லும் எந்தவொரு கப்பல்களையும் குறிவைப்பதாக ரஷ்யா அச்சுறுத்தியது. இதனையடுத்தே டான்யூப் பாதை ஒரு மாற்றாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜூலையில், டானூபில் உள்ள மற்றொரு பெரிய உக்ரேனிய துறைமுகமான ரெனியில் தானிய சேமிப்பு கிடங்கை ரஷ்யா அழித்தது. கோதுமை மற்றும் சோளத்தின் முக்கிய ஏற்றுமதியாளர்களில் உக்ரைன் நாடும் ஒன்றாகும், மேலும் ஏற்றுமதியின் பெரும்பகுதி நாட்டின் கருங்கடல் துறைமுகங்களிலிருந்தே நகர்கிறது.
மட்டுமின்றி, தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறிய உடனேயே உலகச் சந்தைகளில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் தலைநகர் மீதும் இரவோடு இரவாக ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.முன்னதாக, மாஸ்கோ நகரில் உக்ரைன் தரப்பு ட்ரோன் தாக்குதலை முன்னெடுக்க, அதற்கு பழி தீர்க்கும் வகையில் ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்துவதாக கூறுகின்றனர்.