பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் : உயர்மட்ட இராஜதந்திர உரையாடல்களைத் தொடங்குவது குறித்து ஆய்வு!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தென் பசுபிக் பிராந்தியத்திற்கான தனது விஜயத்தின் பின்னர் நேற்று (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டார்.
இதன்போது பிரான்ஸ் ஜனாதிபதியை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்புடன் வரவேற்றதுடன், இருநாட்டு தலைவர்களும் ஏறக்குறைய ஒரு மணித்தியாலமும் பதினைத்து நிமிடங்கள் நட்பு ரீதியாக கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச உறவுகளில் பிரான்ஸின் தலையீட்டைப் பாராட்டிய ரணில் விக்கிரமசிங்க, குறிப்பாக காலநிலை மாற்றத்தைக் குறைத்தல், வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிரச்சனைகளில் அதன் ஆதரவையும் பாராட்டினார்.
அண்மையில் பிரான்சில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி இணக்கப்பாட்டிற்கான மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையும் ஜனாதிபதி மக்ரோன் நினைவு கூர்ந்தார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் பிரான்சின் உறுதிப்பாட்டை இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் உறுதிப்படுத்தினார். இலங்கையின் நான்காவது பெரிய கடன் வழங்குனரான பிரான்ஸ், கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தனது ஆதரவை உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியல், பொருளாதாரம், சுற்றுலா, பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.
கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான கல்வி நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல், இலங்கையில் அபிவிருத்திக்கான பிரெஞ்சு நிறுவனம் (AFD) ஸ்தாபித்தல், உயர்மட்ட இராஜதந்திர உரையாடல்களைத் தொடங்குதல், கல்வித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
மேலும், தற்போதைய உலகளாவிய சூழலில் பிராந்திய மற்றும் பலதரப்பு ஆர்வமுள்ள தலைப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பிரான்ஸ் அங்கம் வகிக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய சங்கத்தின் (IORA) எதிர்வரும் ஜனாதிபதி பதவிக் காலத்தில் இலங்கையுடன் ஒத்துழைக்க பிரான்ஸ் ஆர்வமாக இருப்பதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை பாரிஸில் ஜனாதிபதி மக்ரோன் ஏற்பாடு செய்திருந்த புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாடு மிகவும் சரியான நேரத்தில் இடம்பெற்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதில் பங்குபற்றிய தாம் பாராட்டுவதாக தெரிவித்தார்.
நிலையான எதிர்காலத்திற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தி, பரிஸ் நிகழ்ச்சி நிரலில் இணைவதற்கான இலங்கையின் உடன்பாடும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடல்களின் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்தியப் பெருங்கடலில் திறந்த, விரிவான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பொதுவான இலக்கைப் பகிர்ந்து கொள்ளும் இரு நாடுகளாகும். , எங்கள் கூட்டாண்மைக்கான புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.