மீண்டும் மின்வெட்டுக்கான அறிகுறிகள்: 50,000 ஏக்கர் நெற்பயிர் அழியும் அபாயம்
உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் 50,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய, மகாவலி, நீர்ப்பாசனம் மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவ்வருட அரிசி உற்பத்தி பாரியளவில் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், வறட்சி காரணமாக வாழை மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் மொத்தமாக சுமார் 30 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.
சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 87.9 MCM ஆக குறைந்துள்ளதாகவும், பத்து நாட்களுக்கு நீர் இல்லை என்றால் நீர் மட்டம் 60 MCM ஆக குறைவதால் தென் மாகாணம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் எனவும் மின்சார சபை அதிகாரிகள் விவசாய அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
இக்கலந்துரையாடலில், அடுத்த வாரத்தில் போதிய நீர் விநியோகம் இல்லாததால் நெற்பயிர்ச் செய்கையில் 16.81 பில்லியன் ரூபா நட்டமும், மின்சார உற்பத்தி தடைப்படுவதால் 1.6 பில்லியன் ரூபா நட்டமும் ஏற்படக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.