990 கோடி ரூபா மோசடி செய்துள்ள நிதி நிறுவனம் – விசாரணையில் அம்பலம்
குருநாகலையில் இயங்கிவரும் நிதி நிறுவனம் வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் 990 கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் உரிமையாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த உரிய பிரிவினர் இந்த மோசடியில் பல வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மோசடி செய்த தொகை சுமார் 990 கோடி ரூபாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நிறுவனம் தொடக்கத்தில் மாதம் ஒன்றுக்கு 6 வீதம் வட்டி வழங்கிய பின்னர் வட்டிப் பணத்தை வழங்க தவறியுள்ளது.
தற்போது அது மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதன் பணிப்பாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விசாரிப்பதற்காக குறித்த நபரின் வீட்டிற்கு வைப்பாளர்கள் சென்ற போது அங்கிருந்த அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தம்மை அச்சுறுத்தியதாக வைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மற்றுமொரு ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் அதன் முகாமையாளராக பணிபுரிந்துள்ளார் மேலும் அவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், வைப்பு செய்யப்பட்ட பணத்தில், குருநாகல் ஏரி வட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் சொகுசு வீடுகள், நிலங்களை அந்த நிறுவனத்தின் இயக்குனர் வாங்கியிருப்பதும் விசாரணையில் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி, விசாரணை அதிகாரிகள் தற்போது அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையை நீதிமன்றத்தினால் பெற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.