அமெரிக்காவில் 245 பெண்களிடம் அத்துமீறல்கள்… வைத்தியருக்கு 20 ஆண்டுகள் சிறை!
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ராபர்ட் ஹேடன் (64) கடந்த 1980ம் ஆண்டுகளில் இருந்து, கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார்.
தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு வரும் பெண்களில் பலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு முதல் அவரது பாலியல் லீலைகள் வெளிவரத் தொடங்கின.
கடந்த 2017ம் ஆண்டு பல பெண்கள், தாங்கள் ராபர்ட் ஹேடனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக குற்றம்சாட்டினர்.அவர்களில் சிலர் போலீசிலும் புகார் அளித்தனர். அதையடுத்து அவருக்கு எதிராக கடந்த 2020ல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மகப்பேறு டாக்டராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் 200க்கும் மேற்பட்ட பெண்கள், அவரால் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தனர்.
இவர் மீதான வழக்கு நீதிபதி ரிச்சர்ட் எம்.பெர்மன் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், 9 பெண்கள் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளனர். அதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட ராபர்ட் ஹேடனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண் நோயாளிகளிடம் பாலியல் அத்துமீறல்களை ராபர்ட் ஹேடன் செய்துள்ளார். பலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
குறைந்தது 245 பெண்கள் தாங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக புகார் அளித்துள்ளனர். அவர்களில் சிலர் மட்டுமே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். அதையடுத்து ராபர்ட் ஹேடனுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது’ என்றனர்.