யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறை இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா இன்றையதினம் இடம்பெற்றது.
திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ மற்றும் வணிக பீட வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் உணவுத் திருவிழா ஆரம்பமானது.
உணவுத் திருவிழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா ஆரம்பித்து வைத்ததுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட பீடாதிபதி பா.நிமலதாசன், சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறைத்தலைவரும் பேராசிரியருமான சுபேசன் உள்ளிட்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ் சிங்கள இஸ்லாமிய கலாசார உணவு வகைகள் மற்றும் மேலைத்தேய உணவு வகைகள், குடிபானங்கள் என பல்வேறுபட்ட உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
இரண்டாம் ஆண்டு முதலாம் அரையாண்டில் கல்வி கற்கும் மாணவர்களின் முயற்சியாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.